Language

ஈடு இணையற்ற தலைவராக விளங்கிய தந்தை பெரியார் மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை எதிர்கொண்டு தனிப்பெரும் வரலாறானார்! இதற்கு உதவியவை - அவருடைய வியப்புக்குரிய ஆற்றல், உற்சாகம், எவருக்கும் அடிபணியாத துணிவு, சோர்வடையாத, தளர்ச்சியுறாத உழைப்பு, மற்றும் வேகமும், விவேகமும் கலந்த சுதந்திரமான சிந்தனைகள். சமூகம், பொருளாதாரம், அரசியல், இலக்கியம், தத்துவம், மதங்கள் சார்ந்த பல பிரச்சினைகளைச் சந்தித்தவர் அவர். அவருடைய கவனத்தை ஈர்க்காத, அவர் பரிசீலிக்காத, எந்த ஒரு விஷயமும் மானிட சமுதாயத்தில் இருந்ததில்லை எனலாம். அசாதாரண அறிவும், ஆற்றலும் நிறைந்த மேதையான பெரியார் மனித வாழ்வில் அலசி ஆராயாத அம்சம் ஏதுமில்லை என்றால் மிகையாகாது.

பொது வாழ்க்கையில், மக்கள் சேவையில் தொடர்ந்து அய்ம்பது ஆண்டுகளுக்கு மேல் கடுமையா உழைத்தவர் பெரியார். எந்த சுயநல நோக்கமும் பதவி ஆசையும் இல்லாமல், மானிட சமுதாயத்திற்கு சேவை செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். பொதுமக்களுக்குத் தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு, தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டு உச்சத்தைத் தொட்டவர்கள் எத்தனையோ பேர். ஈரோட்டில் வகித்து வந்த 29 உயர் பதவிகளை உதறித் தள்ளி பொது வாழ்வைத் துவக்கியவர் அவர்! பட்டங்களையோ, பதவிகளையோ அவர் என்றுமே பொருட்படுத்தியதில்லை.

வாழ்நாள் இறுதிவரை அவர் ஒரு போராளியாக மட்டுமே இருந்தார்! சமுதாயப் போர்க்களங்கள் பலவற்றைக் கண்ட செயல்வீரர் பெரியார். பள்ளிப்படிப்பு மிகவும் குறைவு. ஆனால் உலகம் என்ற பள்ளியில் அவர் கற்றது ஏராளம். வாழ்க்கை அனுபவங்களும் அபூர்வமாக கிடைத்த பல அற்புதமான வாய்ப்புகளும் அவருடைய அறிவாற்றலை வளர்த்தன. நூல்களை ஆய்வு நோக்குடன் வாசிக்கும் பழக்கமும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களும் அவரை மேலும் பக்குவப்படுத்தின. நம் நாட்டிலேயே அவர் பயணம் செல்லாத இடமே இருக்காது என்றும் கூறலாம். விசாலமான அறிவையும், ஆழமான சிந்திக்கும் திறனையும் காலப்போக்கில் அவரால் பெற முடிந்ததில் வியப்பில்லை. இளமைக் காலத்திலேயே பகுத்தறிவு அவருக்குள் வேரூன்றியது! ஒருமுறை அவர் இவ்வாறு கூறியது சுட்டிக்காட்டத்தக்கது.

இளமைப் பருவத்திலிருந்தே ஜாதிகளையோ மதங்களையோ நம்பியதில்லை நான். தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் நான் அவற்றை நம்பியவன் போல் பாவனை காட்டியிருக்கலாம் - தோன்றியும் இருக்கலாம். ஆனால் அது நிழல் - நிஜமல்ல. கடவுள் என்ற ஒன்றின் மீது எனக்கு நம்பிக்கையோ அதுபற்றிய அச்சமோ இருந்ததில்லை. தெய்வகுற்றம், கடவுளின் தண்டனை என்றெல்லாம் பயந்து செய்யாமல் இருந்ததில்லை. கடவுளின் திருப்திக்காகவோ அவருடைய அருளுக்காகாவோ ஆசைப்பட்டு என் விருப்பத்திற்கு மாறான எந்த ஒரு செயலையும் நான் செய்ததில்லை.

உலகம் உருவான கதை, சொர்க்கம், நரகம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை விவாதிப்பதில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட கோட்பாடுகள் கற்பனை - சுயநலக்காரர்களின் ஏற்பாடு என்றார் அவர். தன் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் மக்களிடம் சேர்க்கும் களப்பணியாளராக மட்டுமே இருந்தார். பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் உரையாற்றுவது அவர் வழக்கம். எப்படி விளக்கினால் தன் எண்ணங்கள் வெகுச் சாமனிய மக்களை சென்றடையுமோ அப்படி விளக்கி வந்தார் அவர்! பல மேட்டுக்குடி மேதாவிகளுக்கு பெரியாரின் பேச்சும், செயலும் கடுமையாக இருப்பது போலவும் காயப்படுத்துவையாகவும் தோன்றின. ஆனால் லட்சக்கணக்கான பாமர மக்களுக்குப் புரியும்படி விளக்க அவர் கையாண்ட முறைகள் அவை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்படித் தோன்றாது.

கடவுளின் விக்கிரகங்கள் கல்லாலும், மண்ணாலும் உலோகங்களாலும் உருவாக்கப்பட்ட தோற்றங்களேயன்றி வேறேதுமில்லை என்ற உண்மையை பாமர மக்களுக்கு புரிய வைத்து நிரூபிக்க பிள்ளையார் சிலை உடைப்பு, ராமன் பட எரிப்பு போன்ற போராட்டங்களை அவர் நிகழ்த்தினார். வழிபாட்டுக்குரியவையாக நம்பப்பட்ட பல கடவுள் சிலைகளை அகற்றவும் போராடினார். மனிதசக்திக்கு மேலான சக்தி எதுவும் கடவுள் சிலைகளுக்கு கிடையாது என்று வாதிட்டார். புராணக் கட்டுக்கதைகளை எள்ளி நகையாடினார். அறிவுச்சுடரை ஏந்தி பல குக்கிராமங்களுக்குச் சென்று பாமர மக்களைச் சந்தித்து வந்த பெரியார் பகுத்தறிவுடன் எதையும் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்பதன் மூலமாகவும் தர்க்க ரீதியான விவாதங்கள் மூலமாகவும் தெளிவு பெற அவர்களுக்கு வழிகாட்டினார். சாமானிய மக்களின் மனங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்தார். சுயமாகச் சிந்திக்கத் தூண்டினார். அறிவுக்குப் புறம்பான பல பொய்கள் சங்கிலிகள் போலவும் விலங்குகள் போலவும் மக்களை கட்டுப்படுத்தி விலங்கிட்டு வந்தன காலம் காலமாக. அவற்றை உடைத்தெறிவதையே இறுதி வரை தன் லட்சியமாக வைத்திருந்த புரட்சியாளர் அவர்.

புரட்சியாளர்

புரட்சியாளர்

வெற்றுப் பேச்சாளராக இல்லாமல், களத்தில் இறங்கி நேரிடையாகப் போராடி வந்த பகுத்தறிவுள்ள புரட்சியாளர் பெரியார். படித்தவர்கள், பாமரர்கள் நகரவாசிகள், கிராமத்து மக்கள் என அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி போராடி வந்தார். அவர், அவர்களுடைய அறியாமையை புரிய வைத்தார்.

மாற்றங்களை எப்போதும் தயங்காமல் வரவேற்று வந்தார். தன் கொள்கைகளுக்கு வேறு எவருடைய கோட்பாடுகளையும் ஆதாரமாக்கிக் கொள்ளாமல் தனித்தன்மையுடன் போராடிய மகத்தான புரட்சியாளர் அவர்! தன் அனுபவங்களையும், சிந்தனைகளையுமே தன் புரட்சிகரமான செயல்களுக்கு ஆதாரமாக்கியவர் அவர்.

பார்ப்பனர் அல்லாதோரின் துயரங்களுக்கும், உரிமை பறிப்புகளுக்கும் பார்ப்பனர்களே காரணம் என்று நம்பினார் அவர். பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்ந்த போதெல்லாம் அவர் இந்த இரண்டு பிரிவைச் சார்ந்த சேர்ந்த ஆண்களையும் கண்டிக்கத் தயங்கியதில்லை. ஜாதி இந்துக்கள் என்று அழைக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதோர், தாழ்த்தப்பட்டோர் வகுப்பினரை அவமானப்படுத்தி துன்புறுத்திய போதெல்லாம் பெரியார் சற்றும் பாரபட்சம் பாராமல் அவர்களைக் கண்டித்து வந்தார். எளியோருக்கு வலிய சென்று உதவி துயர் நீக்கி வந்தார். பெரியாரைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் மட்டும் அவரிடம் முரண்பாடுகள் உள்ளது என குற்றம் சுமத்தின. ஆனால் அது உண்மையல்ல. தன் கொள்கைகளில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். சமூக சீர்திருத்தவாதிகள் தேர்தல்களில் போட்டியிட்டு பதவிகள் பெற நினைக்கவே கூடாது என்று வாதிட்டவர் அவர். பதவி என்ற அதிகாரம் இல்லாமலேயே மாற்றங்களுக்காக போராடி வந்தார் அவர். தேடி வந்த பல பதவிகளை அவர் ஏற்க மறுத்தார். அவருடைய தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் எவரும் தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. கூடாது என்பது அவரது கட்டளையாகும்.

பார்ப்பனர் அல்லாதோர் கோவில்களில் பிரவேசிக்க இன்று வரை பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கோவில்களைக் கட்டியவர்கள் வெளியே இருக்கும் அவலநிலையை அன்றே கண்டித்தவர் பெரியார். மனித உரிமைகளுக்காகப் போராடிய புரட்சியாளரான பெரியார் இந்த கொடுமையை எதிர்த்தார். கோவில்களின் கர்ப்ப கிரகங்களில் நுழைய போராட்டம் நடத்தவும், கோவில்களையே ஒட்டு மொத்தமாக பகிஷ்கரிக்கவும் திட்டமிட்டு பார்ப்பனர்களை அதிர வைத்தார் அவர்.

கடவுள் மறுப்பை துணிந்து வெளிப்படுத்திய முதல் உலகத் தலைவர் பகுத்தறிவாளர் பெரியார்.
‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.”

என்று அறிவிக்கத் தயங்காத புரட்சியாளர் பெரியார். - இது வசை மொழியில்; சமூக விஞ்ஞான ஆய்வு. கடவுள் நம்பிக்கை ஏன் எப்படி தோன்றும், யாரால் நிலை நிறுத்தப்படுகிறது என்பதை விளக்கிய அணுகுமுறை அது!

பல சமுதாயச் சீர்கேடுகளுக்கு சாஸ்திரங்களும் புராணங்களும் காரணம். அவற்றுக்கு ஆணிவேர் கடவுள் நம்பிக்கை என்பதால் பெரியார் கடவுளை மறுத்தார். கடவுளை எவரும் காண முடியாது, உணரவும் முடியாது என்கிறார்கள் கடவுளை நம்புகிறவர்கள் உருவமே இல்லாத கடவுளை ஆதிமனிதன் நம்பத் துவங்கினான். இந்த உலகை இயக்கும் சக்தி கடவுள் என்று ஆன்மீக வாதிகள் நம்புவதால் தான். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார்.

கடவுளின் பல்வேறு அவதாரங்களை விவரித்து புராணக் கட்டுக்கதைகளை ஆன்மீகவாதிகள் புனைந்து அவற்றை பரப்பியதாலும் சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பிதற்றியதாலும் அவர்களை கண்டிக்கும் வகையில் அயோக்கியர்கள் என்று அவர்களைக் குறிப்பிட்டுள்ளார் அவர். பகுத்தறிவின்றி நடந்து கொள்பவன் ஒரு காட்டுமிராண்டி என்றே நம்பினார் பெரியார். ஏன்? எப்படி? என்றெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல் கண்மூடித்தனமாக கடவுளை நம்பி வரும் அறிவிலிகளை காட்டுமிராண்டிகள் என்று அவர் குறிப்பிட்ட அதுவே காரணம். நாத்திகர்கள் ஆகாமல் ஜாதிக்கொடுமையை ஒழிக்க முடியாது என்று பல தொண்டர்கள் இன்னும் நம்புகிறார்கள்.

சீர்திருத்தவாதி

சீர்திருத்தவாதி

பொருளாதாரம், அரசியல், சமூக சார்ந்த கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற மனிதர்களுக்கு கல்வியே கட்டாயத் தேவை என்று நம்பினார் பெரியார். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து, சமத்துவம் மலர்ந்து, அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென பாடுபட்ட புரட்சியாளர் அவர். கற்றலுக்கான வாய்ப்புகளில் பாரபட்சமே இருக்கக் கூடாது என்று வாதிட்டார். இறுதிவரை யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாதவர் பெரியார். தன்னலம் பாராமல் இறுதி வரை வாழ்ந்தார். எவருக்கும் அடிபணியவில்லை. நிறம் மாறவில்லை. தன்நிலைப்பாட்டிலிருந்து சிறிதளவும் கூட நழுவியதில்லை. சமூகநீதிக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி தளர்ச்சியுறாமல் போராடினார். விட்டுக் கொடுக்க மறுத்தார்.

எந்த ஒரு கட்சிக்கும் அடிவருடியாக அவர் இருந்ததில்லை. முகஸ்துதிகள் செய்து எவரையும் கவர முயலவில்லை. தன் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத எந்த அரசியல் தலைவருடனும் நட்பால் நேசம் பாராட்டி கொள்கையில் எதிர்க்கத் தயங்காத நேர்மையாளர் அவர்! அறியாமை எனும் இருளிலேயே பிடிவாதமாக முடங்கிக் கிடப்பவர்கள் ஒரு நாளும் விடுதலை அடைய மாட்டார்கள் என்று நம்பினார் பெரியார். ஒன்றிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றாலும் இன்னொன்றுக்கு சரணடைந்து மறுபடியும் அடிமை வாழ்க்கையே வாழ்வார்கள் என்று அவர் கருதினார். அறிவிலிகள், முதலாளிகளை மாற்றிக் கொண்டே இருப்பார்களேயொழிய அவர்களை விட்டு விலகி வர மாட்டார்கள் என்று நம்பியவர் அவர். கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் எல்லோருக்கும் சமவாய்ப்புகள் கிடைக்க இருபதாம் நூற்றாண்டில் நாட்டில் நடந்த பல போராட்டங்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் பெரியார். மனித சமுதாயத்தை நம் நாட்டில் மெல்ல மெல்ல அழித்துவரும் புற்றுநோய் ஜாதிக்கொடுமை என்று நம்பியவர் பெரியார். ஜாதி ஒழிப்பைக் காட்டிலும் அவசரமான அவசியமான பணி வேறு எதுவுமில்லை என்று வலியுறுத்தி வந்தார். ஜாதி - தீண்டாமையையும் ஒழிக்க சற்றும் தளர்ந்து விடாமல் போராடிய சீர்திருத்தவாதி அவர். மனித சமுதாயத்தில் தீண்டாமை எனும் கொடுமை எங்குமே இருக்கக் கூடாது என்று உறுதியோடு வாதிட்டவர் அவர்.

கோவில்களுக்குச் செல்ல அனைவருக்கும் உரிமை கோரி போராடிய பெரியார், உணவங்களில் ஜாதி பெயர்கள் குறிப்பிடப்படுவதையும் கண்டித்தார்; போராடினார். வென்றார்! கலப்புத் திருமணங்களுக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கப் போராடினார். பிறப்பின் அடிப்படையில், ஜாதியின் அடிப்படையில் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்தார்.

கோவில்களில் சமஸ்கிருத மொழியில் மட்டுமே அர்ச்சனைகள் நடைபெறும் நிலையை மாற்றி மக்களின் தாய்மொழியில் அவை நடைபெற வழிசெய்யும் வகையிலும் போராடியவர் பெரியார். அது ஒரு பண்பாட்டு அடிமைத்தனம் என்று விளக்கினார். இப்படி ஏராளமான சீர்திருத்தங்களுக்காகப் போராடி அவற்றை நடைமுறையில் செயல்பட வைத்தவர் தந்தை பெரியார்.

புரையோடிப் போன மனித சமுதாயத்தைக் காத்த மாமனிதர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் எதற்கும் வளைந்து கொடுக்காமல், சலிப்படையாமல், சோர்வடையாமல் உழைத்தவரால் ஏற்பட்ட சமூகச் சீர்திருத்தங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

மனிதநேயர்

மனிதநேயர்

இது பெரியாரின் மகத்தான மற்றொரு பரிமாணமாகும். எந்த ஒரு தனிப்பட்ட மொழி அல்லது இனத்தின் மீது பற்று கொள்ளாதவர். எந்த மதத்தின் மீதும், ஜாதி மீதும் நம்பிக்கை கொள்ளாதவர். கண்மூடித்தனமாக எந்த அரசியல் கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாதவர். பயனற்ற, அறிவுக்குப் புறம்பான எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய பார்ப்பன துவேஷத்திற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. ஜாதிபாகுபாடுகளுக்கு மூலகாரணம் இந்து மதம் என்றும், பார்ப்பனீயமும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும் தான் இந்து மதத்தின் ஆணிவேர் என்றும் அவர் நம்பினார் - ஆதாரங்களையும் சுட்டி விளக்கினார்.

எல்லாவித ஏற்றத் தாழ்வுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் பார்ப்பனர் மூலகாரணம் என்பதால் அவர் அவர்களை கடுமையாக எதிர்த்து வந்தார். இதன் காரணமாகவே இந்து மதத்தை நிராகரித்தார். சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த புதிய சமுதாயம் உருவாகப் போராடினார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடிய மனிதநேயர் பெரியார்.

பெண்ணடிமைத்தனத்தினை ஒழிப்பதற்காக போராடிய பெரியார், பால்ய விவாகங்களையும் வரதட்சணைக் கொடுமைகளையும் கடுமையாக எதிர்த்தார். ஆண்களின் ஆதிக்கம் ஒழியவும் பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவா விவாக உரிமை ஆகியவை கிடைக்கவும் போராடினார். பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கும் புராணக் கட்டுக்கதைகளை அவர் எள்ளி நகையாடினார். பொதுக் கூட்டங்களிலும், சுயமரியாதைத் திருமண விழாக்களிலும், அரசியல் மாநாடுகளிலும், தன் கட்டுரைகளிலும் தன் மனிதநேயக் கருத்துகளை வெளிப்படுத்தத் தவறியதில்லை அவர்.

பெண்களை வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும், அடுப்பூதும் கரங்களாகவும் மட்டுமே பார்க்கும் நிலையை மாற்ற பாடுபட்டார் அவர். வீட்டுக்குள்ளேயே பூட்டி அடைப்பட்டுக் கிடக்கும் சிறைப் பறவைகளாக பெண்கள் அவதிப்படும் கொடுமையும் ஆண்களைச் சார்ந்தே வாழும் அவலமும் ஒழிய வேண்டும் என்று வாதிட்டு வந்தார். பெண்களின் விடுதலைக்கு சிறந்த வழி கருவுக்குக் கதவடைப்பு என்று நம்பிய பெரியார், குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரமாக ஆதரித்தார். இந்தியாவுக்கே இதில் அவர் முன்னோடி 1930களிலேயே பிரச்சாரம் செய்தார். இந்த பெண் விடுதலைச் சிந்தனையிலும் பெரியார் உலகிற்கு வழிகாட்டியாக விளங் கினார். சடங்குகள் சம்பிரதாயங்கள் அற்ற, பார்ப்பனர்களை விலக்கிய, அவர் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அவரது வாழ் நாளிலேயே சட்டப்பூர்வமான அரசு அங்கீகாரம் கிடைத்து. ஆணுக்கு பெண் அடிமை என்று வலியுறுத்தி வந்த அர்த்தமற்ற மந்திரங்களையும் மூடவழக்கங்களையும் தவிர்க்க வழி வகுத்தார். பெரியார் என்ற மனிதநேயரின் முயற்சிகளால் இன்று ஜாதி ஒழிப்பு - கலப்புத் திருமணங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. தந்தை பெரியாரை ஈடு இணையற்ற மனித நேயராக உலகம் புரிந்து கொள்ள இதற்கு மேலும் சான்றுகள் தேவையா?

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்