Language

நாகம்மையார்

நாகம்மையார்

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் பெரியாருக்கு பேருதவி புரிந்தவர் அன்னை நாகம்மையார். தந்தை பெரியார் அவர்களை 1898ஆம் ஆண்டு மணம் புரிந்த அன்னை நாகம்மையார், சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் 1885ஆம் ஆண்டு பிறந்தவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டபோது, ஆடம்பரமிக்க ஆடை, அணிகலன்களை ஒதுக்கி எளிமையின் சிகரமாக மாறினார் நாகம்மையார்.

1921ஆம் ஆண்டில் தந்தை பெரியார் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டார். அப்போது நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் சேர்ந்து மறியலைத் தொடர்ந்தனர். முதன்முதலில் பெண்கள் விடுதலைப் போரில் கலந்து கொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றில் இடம்பெற்ற முதன்மையான நிகழ்வு ஆகும்.

அரசு விதித்திருந்த 144 தடை உத்தரவை மீறியதால் ஈரோடு நகரமே கலவரத்தால் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட அரசு கைது நடவடிக்கையைத் தொடர அஞ்சி, சமரசத்திற்கு முன்வந்தது. சர்.சங்கரன் நாயர் தலைமையில் மாளவியா மாநாடு மும்பையில் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு காந்தியடிகளை வேண்டினார் சங்கரன் நாயர். அதற்கு காந்தியடிகள், போராட்டத்தைக் கைவிடலாமா? தொடர்வதா என்பது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டும் என்றார்.

ஜாதி மத வேறுபாடுகளை நீக்கவும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் மேடைகளில் முழக்கமிட்டார். பெண் கல்வியின் இன்றியமையாமை, கலப்பு மணம், விதவைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் போன்ற கருத்துகளைத் தமது பிரச்சாரங்களில் வலியுறுத்தினார்.

1924 ஏப்ரலில் கேரள மாநிலம் வைக்கத்தில் அன்றைய சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியில் ஈழவர் எனப்படும் தீயர், புலையர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க நடைபெற்றதே வைக்கம் போராட்டமாகும். இப்போராட்டத்தினால் இரண்டு முறை சிறைப்பட்டார் பெரியார். அவ்வேளையில் நாகம்மையார், தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் தமிழகத்துப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்து சேர்ந்தார்.

தமிழகம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நாகம்மையாரின் தலைமையில் வைக்கம் போராட்டத்தில் அணிவகுத்து நின்றனர். அறப்போர் மேற்கொள்வதால் சிறைத்தண்டனை கிடைக்கும் எனினும் அஞ்சாமல் துணிவுடன் போராட்டக் களத்தில் வீராங்கனையாக நாகம்மையார் விளங்கினார். விருந்தோம்பலில் அம்மையாருக்கு இணையானவர் எவருமிலர். தம் இல்லத்திற்கு வரும் தொண்டர்களுக்கு இனிய முகத்துடனும் இன்சொல்லுடனும் இன்னமுது படைத்து வந்ததை எவரும் மறுத்துக் கூற முடியாது.

பெரியாருடன் மலேசியா, சிங்கப்பூர் சென்றுவிட்டு, நம் நாட்டிற்குத் திரும்பும்போது, தங்களுக்கு விருப்பமான _ தேவையான மலாய் நாட்டுப் பொருள்கள் எவை என்று கேட்ட தமிழர்களிடம், நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள் என்று பாராட்டினாராம் நாகம்மையார்.

1930ஆம் ஆண்டு குடிஅரசு ஏட்டின் பதிப்பாசிரியரான அன்னை நாகம்மையார் 1933ஆம் ஆண்டு மே 11 அன்று மறைந்தார். நாகம்மையாரின் பெயர் என்றும் நிலைத்திடும் வகையில், திருச்சி பெரியார் மாளிகையில் 1959ஆம் ஆண்டு ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக நாகம்மையார் இல்லம் என்ற பெயரில் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தனது பொன்விழாவினை இந்த இல்லம் கொண்டாடியுள்ளது.

தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, அய்யாவுக்குப் பின் அன்னை மணியம்மையார் அவர்களாலும், அம்மாவுக்குப் பின் நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்களாலும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்