Language

மணியம்மையார்

மணியம்மையார்

மணியம்மையார் 10.03.1920 இல் பிறந்தார். பெற்றோர் திராவிடர் கொள்கைகளின் மீது பற்று நிறைந்தவர்கள். தாங்கள் வசித்து வந்த பகுதியில் சுயமரியாதை பற்றி விளக்கி பிரச்சாரம் செய்து வந்தனர். அவற்றைப் பின்பற்றியே அவர்களும் வாழ்ந்தனர். அவருடைய தந்தை சொந்தமாக விறகுக்கடை ஒன்றை நடத்தி வந்தார். பெற்றோர் எளிமையாக வாழ்க்கையே போதும் என்ற மனநிறைவுடன் இருந்தவர்கள். பெரியாரை ஒரு தாயின் பாசத்துடன் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார் மணியம்மையார். அவர் எதைச் சாப்பிட வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்று கூட கண்டிப்புடன் முடிவு செய்து வந்த ஒரே நபர் அவர். தன் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் மணியம்மையாரே காரணம் என்று பெருமிதத்துடன் கூறி வந்தார் பெரியார்.

பெரியாரின் சுயமரியாதை கொள்கையை மிகவும் தெளிவாகப் புரிந்து கொண்டவர் மணியம்மையார். முப்பது ஆண்டுகாலம் அவரோடு வாழ்ந்ததால் ஏற்பட்ட புரிதல் அது. பெரியாரின் கொள்கைகளையும் லட்சியங்களையும் மட்டுமே மிகப் பெரிய சொத்தாக அவர் பாதுகாத்து வந்தார் - அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை அல்ல. பெரியாரின் சுயமரியாதை கொள்கை அவற்றுள் ஒன்று. ஆதரவற்ற குழந்தைகளுக்காக திருச்சியில் பல சேவைகள் செய்தவர் அன்னை மணியம்மையார். அவர்களை அனாதைகள் என்று எவரும் அழைப்பதை விரும்பவில்லை அவர். பெண்களை தன் மகள்கள் போலவே நடத்தி தக்க வயதில் அவர்களுக்கு மணமுடித்தும் வந்தார். அவருடைய ஆதரவில் வளர்ந்தவர்கள் வருங்காலத்தில் வளமுடன் வாழ்ந்து வந்தார்கள். உடல்நலம் குன்றிய பலருக்கு பணிவிடைகள் செய்தார். தென்னாட்டு அன்னை தெரசா என்றே அவரை அழைக்கலாம். திராவிடர் கட்சியின் தலைவர் கி.வீரமணி அவர்களும் மணியம்மையாரை பெற்ற தாயாகவே கருதி வணங்கி வந்தார். சிறுவயதிலேயே பெற்ற அன்னையை இழந்தவருக்கு மணியம்மையாரின் உருவில் அவர் காட்சியளித்தார். மேலும் பலருக்கு அவர் பாசம் மிகுந்த அன்னையாக விளங்கினார்.

பெரியாரின் கட்சியில் சிறந்த பணியாளராக அவருடைய அன்றாட வாழ்வில் பாதுகாவலராக, இறுதியாக அவருடைய கட்சியின் தலைவராக - மூன்று பகுதிகளாக அன்னையாரின் வாழ்வை புரிந்து கொள்ள முடிகிறது. பெரியாருக்கு சேவை செய்வதே என் முதல் கடமை. என் பிள்ளை போல் கருதி அவருடைய உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டு விடாதபடி அக்கறையுடன் அவரை பாதுகாத்து வருகிறேன். என்று அவர் அடிக்கடி கூறிவந்தார்.

ஒரு செல்வந்தரின் வாழ்விணையராக இருந்தும் அவருடைய நூல்களின் விற்பனைக்காக பாடுபட்டார். பல மணி நேரம் அமர்ந்து நூல்களை விற்று, பொதுக்கூட்டங்கள் முடிந்தபின் அதற்கான கணக்கை பெரியாரிடம் ஒப்படைத்து வந்தார். 19.07.1949 இல் பதிவு திருமணம் மூலம் பெரியாரின் வாழ்விணையரான அன்னை அவருடைய இறுதி நாள் வரை ஈருடல் ஓர்உயிர் என்பது போல் வாழ்ந்தார். அவருடைய தியாக உள்ளமும், பற்றுதலும் ஈடு இணையற்றவை. மிகப்பெரிய செல்வந்தரின் வாழ்விணையர் என்ற கர்வம் துளியுமின்றி எளிமையாக கடைசிவரை வாழ்ந்தவர் அன்னையார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். மணியம்மையார் - தடையை மீறி 1948 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெரியார் நடத்திய இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார் அவர். மென்மையான இதயம் கொண்டவர் அன்னை மணியம்மையார். அபூர்வமாக கோபம் கொண்டாலும் சில நொடிகளில் அந்த கோபம் மறைந்து போவது வழக்கம்.
ஆதரவற்ற ஆறு பெண்களின் உதவிக்காக ஆறு சிறிய பைகளில் நகைகள் சிலவற்றை வைத்து அவர்களுடைய பெயர்களையும் அவற்றின் மீது எழுதி சிண்டிகேட் வங்கியின் லாக்கரில் வைத்து பாதுகாத்தார். தன் மறைவுக்குப் பின் அந்த ஆறு பெண்களுக்கும் அவை வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் ஓர் ஏற்பாட்டையும் செய்திருந்தார். அப்படியே நடந்தது அவர் மறைந்த பிறகு. ஆனால் வாழ்ந்த காலத்தில் எந்த நகையும் அணிந்து அவர் தன்னை அலங்கரித்துக் கொண்டதே இல்லை. பெரியாரைப் போலவே அன்னையாரிடம் சிக்கனம் இருந்தது - கருமித்தனம் இருக்கவில்லை. பெரியாருக்கு எல்லாவிதத்திலும் தகுதியுள்ள வாரிசாகவே இருந்தார் ம்ணியம்மையார். திராவிடர் இயக்கம் பெரியாரின் வரலாறாக மட்டுமல்ல - மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறாகவும் அந்த இயக்கம் இருந்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை என்று எதையும் தனக்காக அமைத்துக் கொள்ளவில்லை அவர். திராவிடர் கட்சியோடு பின்னிப் பிணையப்பட்டது அவருடைய வாழ்க்கை. தன்னலம் சிறிதும் இல்லாமல், எந்த ஒரு மூடநம்பிக்கையும் இல்லாமல், பெரியாருடன் நகலாகவே எல்லா வகையிலும் வாழ்ந்து மறைந்தார் அவர்.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்