Language

கொள்கைகள்

கோட்பாடுகள் கொள்கைகள்

எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும் வகையில் சமுதாயத்தில் சமத்துவம் தழைக்க போராடியவர் பெரியார். எல்லோருக்கும் பாரபட்சமின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்றார். ஜாதிபாகுபாடுகள் ஒழிய குரல் கொடுத்தார். மதவெறியையும் மூடநம்பிக்கைகளையும் கடுமையாக எதிர்த்தார். கடவுளை கற்பித்தவன் மனிதன் என்றார். ஆத்மா, விதி, மறுபிறவி - இவற்றையெல்லாம் மறுத்தார்.

"எனக்கு எந்தப்பற்றும் இல்லை. எனக்குள்ள பற்று அறிவுப்பற்று. வளர்ச்சிப்பற்று – மானிடப்பற்று” என்று பலமுறை கூறியுள்ளார். எதற்காகவும் எவருடனும் சமரசம் செய்து கொள்ளாதவர் பெரியார். எல்லா எதிர்ப்புகளையும் மன உறுதியுடன் எதிர் கொண்டார்.

பெண் விடுதலைக்காகப் போராடியவர் அவர். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருந்தும் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடினார். ஜாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். உயர்ந்த ஜாதியில் பிறந்தவராக இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலத்திற்காக தீவிரமாகப் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவை ஒழிப்பதே என் முதல்பணி என்று முழங்கி வந்தார் அவர்.

விமரிசனங்களால் பெரியார் ஒரு நாளும் கலங்கியதில்லை. கடுமையான விமரிசனங்களையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது அவருக்கு. தங்களுக்கு ஏற்புடையதாக தோன்றாவிட்டால் தன் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நிராகரிக்க தன் தோழர்கள் தயங்கக் கூடாது என்றும் கூறிவந்தார் அவர். தன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று அவர் ஒருபோதும் எவரையும் கட்டாயப்படுத்தியதில்லை.

சமுதாயத்தை நவீனமயமாக்கிவிட விரும்பினார் பெரியார். காலத்திற்கேற்ற மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்று வாதிட்டார். பழமை வாதத்தை கடுமையாக எதிர்த்தார். எதிலும் அறிவியல் பார்வை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அர்த்தமற்ற சாஸ்திர சம்பிரதாயங்களும் சடங்குகளும் ஒழிய வேண்டும் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கினார்.

"அனைவருக்கும் அனைத்தும்” என்ற கோட்பாட்டில் உறுதி தளராமல் வாழ்ந்தவர் அவர். கடந்த கால அறிஞர்கள், நிகழ்கால மேதைகள் - எவருடைய கருத்துகளையும் ஆதாரமாக கொள்ளாமல் தன் அனுபவங்களையும் சுயமான சிந்தனைகளையும் மட்டுமே வெளிப்படுத்தி வந்தார் பெரியார். அவருடைய பார்வையில் நாகரிகம் என்பது மனிதநேயமே ஆகும்.

அவர் அடிக்கடி தோழர்களுக்கு கூறி வந்த அறிவுரை – “ எந்தக் காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தவறா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதைக் கொடு!” அதன்படியே நடந்து கொண்டனர் கழகத் தோழர்கள்.

1942 ஆம் ஆண்டு “இனிவரும் உலகம்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை நூல் வடிவில் உள்ளது. தோலை நோக்காளராக பெரியார் வாழ்ந்ததற்கு அந்த உரையே ஆதாரம். எந்த ஒரு விவகாரத்தையும் பிரச்சினையையும் அவர் எப்படி அணுகினார் என்பதை கீழ்கண்டவாறு சுருக்கிக் கூற இயலும்.

  • * இது நியாயமானது தானா?
  • * எல்லோருக்கும் நன்மை தரக்கூடியதா? - என்று நம்மையே கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • * அறிவுக்கு புறம்பாக இருக்கலாகாது எதுவும்.
  • * சராசரி ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்பான விருப்பங்களுக்கேற்ப உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஏற்புடையதாக ஒரு விஷயம் இல்லை எனில் அதை கைவிட்டு விடத் தயங்கக் கூடாது. மக்கள் வரவேற்காத எதையும் நீண்ட காலத்திற்கு கடைபிடித்து வருவதைத் தவிர்த்தல் நலம்.
  • * மனிதர்களின் ஆற்றலுக்கும் முயற்சிகளுக்கும் உதவும் வகையில் எந்த ஒரு முடிவும் அமைய வேண்டும்.
  • * மனிதர்களின் வாழ்வு வளம் பெறவும் அவர்கள் முன்னேறவும் வழிபிறக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் பயனில்லை என்று உறுதியாக புரிந்து கொண்ட பட்சத்தில் அதை எதிர்க்க பெரியார் தயங்கியதே இல்லை. ஆழ்ந்து சிந்திக்கும் பழக்கம் இருந்ததால் நடைமுறைக்கு ஒத்துவராத எந்த கோட்பாட்டையும் பெரியார் உருவாக்கியதே இல்லை எனலாம்.

அறிவியலுக்குப் புறம்பான செயல்களை பெரியார் அடியோடு வெறுத்தார். அர்த்தமற்ற கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். பகுத்தறிவு எல்லைக்கு உட்பட்டே அவருடைய நிலைப்பாடுகள் இருந்தன. இழிவான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தார். அறியாமையும் மூடநம்பிக்கைகளும் அழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட வேண்டுமென்றால் “ஏன்? எதற்கு? எப்படி? யாரால்?” – என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்க வேண்டும் என்றார் அவர். கேள்வி கேட்டு. காரண காரியம் அறிந்து தெளிவடைவதே ஒரு மனிதனுக்கு அறிவியல் சிந்தனை வயப்பட்டவனாக மாறும் வாய்ப்பைத் தரும் என்று வலியுறுத்தி வந்தார் அவர். எனவே அவரை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று வர்ணித்தது “யுனெஸ்கோ” பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை அறிவியலையே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் அவரை ஈடு இணையற்ற சமுதாய விஞ்ஞானி என்று அழைப்பதில் உலகமே பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்