Language

சட்டவடிவம்

சிந்தனைகள் சட்டவடிவம் பெற்ற வரலாறு

வகுப்புவாரி உரிமை

தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் வகுப்புரிமைக்காக போராடினார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே ஒவ்வொரு மாகாண மாநாட்டில் வகுப்புவாரிஉரிமை தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சமூக நீதி மறுக்கப்பட்டதாலே காங்கிரசிலிருந்து வெளியேறினார். 50 சதவிகித ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார். 1927ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆதரவு ஆட்சி வகுப்புவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் ஆணைகளைப் பிறப்பித்தது. 1947ஆம் ஆண்டு சென்னை மாகாணப் பிரதமர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் பிற்படுத்தப்பட்டோருக்கென்று 14 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தார். இடஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.

தந்தை பெரியார் மக்களைத் திரட்டிப் போராடினார். 1951ஆம் ஆண்டு இடஒதுக் கீட்டிற்குப் பாதுகாப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டது. பெரியார் இடஒதுக்கீடு கோரினார். முதலமைச்சர் காமராஜர் 31 சதவிகிதம் அளித்து ஆணை பிறப்பித்தார். பெரியார் இடஒதுக்கீடு கோரினார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 69 சதவிகிதம் அளித்து ஆணை பிறப்பித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறலாம். ஆனால் பெரியார் வலியுறுத்திய இடஒதுக்கீட்டின் அளவு உயர்ந்து கொண்டே வந்துள்ளது என்றால் தமிழ்நாட்டை பெரியார் ஆள்கிறார் என்று பொருள்.

சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம்

திருமணங்கள் - பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த தன்மையில் நடைபெற வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தி வந்தார். பல்லாயிரக் கணக்கானக் குடும்பங்கள் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி மகிழ்ந்தன. பார்ப்ப னர்களை அழைத்து, இந்துமதச் சடங்குபடிச் செய்யப்படாதத் திருமணங்கள், சட்டப்படி செல்லாது என்று பிரச்சாரமும் செய்யப்பட்டது. இந்துமதம் சடங்குகளை விலக்கி விட்டுச் செய்கிற திருமணங்கள் செல்லாதவை என நீதிமன்றங்களும் தீர்ப்புகளை அளித்தன. அறிஞர் அண்ணா முதலமைச்சரானவுடன் சுயமரியாதைத் திருமணம் செல்லும் எனச் சட்டம் இயற்றினார். இது 1967ஆம் ஆண்டைய இந்துத் திருமண (தமிழ்நாடு)த் திருத்த மசோதா (Hindu Marriage (Tamilnadu) Amendement bile 1967)) என்ற பெயரில் அமைந்த திருத்தச் சட்டமாகும். பெரியாரின் கொள்கை சட்ட வடிவம் பெற்றது. (பிறகு 50ஆண்டுகளுக்கு பின்பு உயர்நீதிமன்றமும் ஒரு தீர்ப்பில் இதை உறுதிப்படுத்தியது.)

கோயில் நுழைவுச் சட்டம்

1926ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லதார் மாநாட்டில் இந்துக் கோயில்கள், இந்து என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும், பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டு என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் திருவண்ணாமலை, ஈரோடு, திருச்செந்தூர், மயிலாடுதுறை, திருச்சி மலைக்கோட்டை என்று பல இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றன. கோயிலில் நுழைந்தோரை அரசு பாதுகாக்கும் என்று ஒரு சட்டம் 1939ஆம் ஆண்டு Madras Temple Enter Autharization and Indemnity Act ஒன்றும், 1947இல் எல்லா ஜாதியினரும் கோயிலில் நுழைய The Tamilnadu Temple Entry Autharization Act இயற்றப்பட்டன.

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார். நாகரிகமுள்ள அரசாங்கம் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒரு க்ஷண நேரம் கூட விட்டு வைக்காது என்று அறிவுறுத்தினார். பெரியாரின் சிந்தனை, சென்னை சட்டமன்றத்தில், 1930இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டமாக (Devadasi system Abolition Act, 1930 நிறைவேறியது. சட்டத்தில் இருந்த குறைபாடுகள் களைகிற விதத்தில், 1947ஆம் ஆண்டைய தேவதாசி ஒழிப்புச் (பொட்டுக் கட்டுதல் தடுப்பு) சட்டம் (The Madras Devadasis Prevention of Dedication Act 1947) நிறைவேற்றப்பட்டது.

குழந்தை மணத் தடுப்புச் சட்டம்

குழந்தை மணம் இந்தியா முழுவதும் பரவலாக நடந்து வந்தது. தந்தை பெரியார் 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடத்திய முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் பெண்களுக்கு 16 வயதுக்கு மேல் தான் திருமணத்தைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். சாரதா சட்டம் 1930இல் வந்தாலும் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. 1955இல் இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் வகையில் 1978இல் சட்ட திருத்தம் செய்யப்பெற்றது. பெரியாரின் சிந்தனை சட்ட வடிவம் பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.

விவாகரத்து உரிமைச்சட்டம்

மனைவிக்கும் கணவனுக்கும் ஒற்றுமை இல்லை என்றால் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் வலியுறுத்தினார். 1929ஆம் ஆண்டிலேயே செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றினார். இந்து திருமணச் (Hindu Marriage Act) 1955 மூலம் மனைவிக்கு சட்ட அங்கீகாரம் பெற்றது.

பெண் ஆசிரியர் நியமனச் சட்டம்

பெரியார் தொடக்கப்பள்ளிகளில் பெண் களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றார். பெரியாரின் கருத்து 1989ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது சட்டமாகியது.

மதுவிலக்கு ரத்துச் சட்டம்

கள் ஒழிப்பு கல்வி ஒழிப்பே என்றார் பெரியார். மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. தி.மு.க., அ.இ.தி.மு.க. அரசுகள் பெரியாரின் சிந்தனைக்கு சட்டம் வடிவம் தந்தன.

தமிழ்நாடு பெயர் சூட்டல்

இந்த மண்ணில் பண்பாட்டு அடையாளத்தை உலகெங்கும் உரத்துச் சொல்லும் வகையில் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார் பெரியார். சென்னை நாடு என்றும், சென்னை ராஜதானி என்றும் பெயர் சூட்டுவதை பெரியார் கடுமையாக எதிர்த்தார். 11.10.1955 அன்றே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய வாழ்வோ, என்னை பின்பற்றும் கழகத்தினருடைய வாழ்வோ எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை என்ற பெரியாரின் கூற்று அவரின் வேட்கையை உணர்த்துகின்றது. பெரியாரின் கொள்கைபடி 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1968 நவம்பர் 23இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெரியார் கொள்கை வென்றே தீரும்.

இருமொழிக் கொள்கைச் சட்டம்

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை எனும் சூழலை உருவாக்கிய பெருமை தந்தை பெரியாரையே சாரும். 1926ஆம் ஆண்டிலேயே இந்தியின் ரகசியம் எழுதியவர் பெரியார். 1938ஆம் ஆண்டு அவர் நடத்திய முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றில் அழியாத புகழ் படைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள், பெரியார் கருத்துக்களை சட்டம் மூலம் செயல்படுத்த இந்தச் சர்க்காரில் அதிகார எல்லைக்கு உட்பட்டு என்னென்ன செய்யமுடியுமோ அவைகளை செய்யத் தயாராக இருக்கின்றேன் என்று பிரகடனப்படுத்தினார். பெரியார் மொழிக் கொள்கைக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் அண்ணா அவர்கள், தம் ஆட்சி காலத்தில் இருமொழிக் கொள்கையினைச் சட்டமாக்கினார்.

பெண்களுக்கு சொத்துரிமை சட்டம்

ஆண்களைப் போல பெண்களுக்கும் சமமாகச் சொத்துரிமைகளும், வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்று 1929ஆம் ஆண்டிலேயே செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றி பெண்ணுரிமைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை உண்டு என்கின்ற சட்டத்தை நிறைவேற்றினார். தமிழகத்தின் இந்தச் சட்டத்துக்குப் பின்னர்தான் 16 ஆண்கள் கழித்து 2005இல் இந்திய அளவில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியாரின் சிந்தனை வளத்தினை - மண்டைச் சுரப்பை உலகு தொழுவதை உணர முடிகிறது. பெரியாரின் எல்லா லட்சியங்களும் உலகம் முழுவதும் சட்டமாகும் என்பது நிச்சயம்.

ஸ்ரீ அடைமொழிச் சொல் திருத்தச் சட்டம்

1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அரசின் கடிதப் போக்குவரத்தில் பெயருக்கு முன்னால் ஸ்ரீ என்னும் அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. பெரியார் எதிர்த்தார். 04.08.1940 அன்று திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15ஆவது மாகாண மாநாட்டில் ஸ்ரீ என்னும் வார்த்தைக்கு பதில் திரு என்னும் தமிழ்ச்செல்லையே பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். பெரியாரின் கருத்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்டமாகியது. ஸ்ரீ ஒழிந்து திரு நடைமுறைக்கு வந்தது.

சமத்துவபுரம்

ஆதி திராவிடர்களுக்கு தனிக் குடியிருப்பு என்பதை பெரியார் வெறுத்தார். அவர்கள் மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழவேண்டும்; சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். 1996 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் குடியிருக்கும் வகையில் முதல்வர் கலைஞர் சமத்துவபுரம் உருவாக்கினார். நாட்டில் சமத்துவபுரம் இருக்கிறதென்றால் அங்கே பெரியார் ஆட்சி செய்கிறார் என்று பொருள். சமத்துவபுரத்தில் பெரியார் சிலை என்பது பொருத்தமானது, கூடுதல் சிறப்பும் கூட.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் உரிமை ஏற்பட வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தி வந்தார். வருணாசிரமத்தின் ஆணிவேர் கோயில் கருவறையில் இருப்பதைக் கண்டார். பிறவி வழியை நிலைநிறுத்தும் வருணாசிரம சாதி முறை எனும் கொடுமையை ஒழிக்க அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்தார். 26.01.1970 அன்று கோயில் கருவறை நுழைவுக் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்த இருந்த நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கொண்டு வரும் போவதாக முதல்வர் கலைஞர் அறிவிக்க பெரியார் போராட்டத்தை ஒத்திவைத்தார் அனைத்து ஜாதியினரும் ஆலயங்களில் நியமனம் பெற்றிட வாய்ப்பளிக்கும் சட்ட முன்வரைவு 30.11.1970 அன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்துக் கட்சியின் ஆதரவோடு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சட்ட முன்வரைவு ஏற்கப்பட்டு நிறைவேறியது தமிழக அரசு நிறைவேற்றிய, தமிழக இந்து அறநிலையத்துறை திருத்தச்சட்டம் 08.01.1971 முதல் நடைமுறைக்கு வந்தது. மனித உரிமைச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கோயில் பகிஷ்க்காரக் கிளர்ச்சியை பெரியார் அறிவித்தார். போராட்டத்திற்கு அரசு தடை விதித்தது. தடையை மதிப்பதும், தடைக்கு ஆளாவதும் மானக்கேடு என்று கருதினார் பெரியார். தந்தை பெரியாரின் கொள்கையினைச் சட்ட வடிவமாக எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி செய்தனர். சட்டம் மீண்டும் வரும். ஜாதிக் கொடுமை ஒழியும். மனித உரிமை உயிர்பெறும்.

கை ரிக்ஷா ஒழிப்புச் சட்டம்

மனிதனை வண்டியில் அமரவைத்து மனிதனே இழுத்துக் கொண்டுச் செல்லும் கை ரிக்ஷா முறை கொடுமையானது என்று 1948ஆம் ஆண்டிலேயே பெரியார் கண்டித்து பேசினார். கலைஞர் முதல்வராக இருந்த போது பெரியாரின் சிந்தனைக்கு சட்ட வடிவம் தந்தார். கை ரிக்ஷா ஒழிப்புச் சட்டம் மலர்ந்தது. மனிதநேயம் தழைத்தது.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சட்டம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்தவர் தந்தை பெரியார். எழுத்துச் சீர்திருத்தம் அவசியம் என்று கருதினாலும் தமிழ் அறிஞர்கள் எவரும் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய தைரியமாக முன்வரவில்லை. தந்தை பெரியார் பத்தாவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கவில்லை. ஆனால் துணிச்சலாக எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவித்தார். தகுந்த புலமையும், பாஷா ஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என்ன செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜெபம் செய்வதா? என்று வினா எழுப்பினார். எழுத்துக்களில் வரி வடிவங்களை மாற்றி அமைத்தார். யாரும் பின்பற்றவில்லை என்றாலும் தம்முடைய பகுத்தறிவு, குடிஅரசு, புரட்சி, விடுதலை, உண்மை இதழ்களில் தொடர்ந்து எழுத்துச் சீர்திருத்தத்தை பயன்படுத்தி வந்தார். 1978ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்டமாக்கினார். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளும் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று ஆணை பிறப்பித்தன.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்