Language

திராவிடர் கழகம்

ஒரு புரட்சியின் மலர்ச்சி

கட்சியின் பெயர் மாற்றம்

1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் நாள் சேலத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் மாகாண மாநாடு பெரியாரின் இயக்கத்தில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. கட்சியின் பெயர் திராவிட கழகம் என்று மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட பதவிகளையும் பட்டங்களையும் துறந்து விடுமாறு கழக உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதியை குறிப்பிட்டுக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று கழகம் கேட்டுக்கொண்டது. இயக்கத்தின் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் முழுக்க, முழுக்க அரசியல் கட்சியாக இருந்த ஜஸ்டிஸ் கட்சி - நீதிக்கட்சி - திராவிடர் கழகமாக மாறியபின் அரசியல் சாரா கட்சியாகவும், சமூக பண்பாட்டு இயக்கமாகவும் புதிய வடிவம் பெற்று இன்றுவரை அது மாறாமல் நிலைத்துள்ளது.

தலைவர் கி.வீரமணி அவர்களின் முதல் உரை

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சேலம் மாநாட்டின்போது இன்று திராவிட கழகத்தின் தலைவராக உள்ள கி.வீரமணி அவர்கள் பதினொரு வயது கூட நிறையாத சிறுவனாக இருந்தார். எனவே தந்தை பெரியார் அவரை ஒரு மேஜை மீது நிற்க வைத்து கூட்டத்தில் உரையாற்ற வைத்தார். இளம் வயதிலேயே சைவ மதம் சார்ந்த பாடல்களை இயற்றிய பக்திமானாக கருதப்பட்டவர் திருஞானசம்பந்தர் என்பவர். அறிஞர் அண்ணா சிறுவன் வீரமணியை ’சுயமரியாதை இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ என்று கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிறுவனின் பேச்சாற்றல் மாநாட்டிற்கு வருகை வந்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திற்றாம்.

கல்கத்தா மாநாடு

1944 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலும் பெரியார் வடநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1944 டிசம்பர் 27ஆம் நாளன்று கல்கத்தாவில் நடைபெற்ற தீவிரவாத ஜனநாயகக் கட்சி மாநாட்டில் உரையாற்றினார். அக்கட்சியின் தலைவர் எம்.என்.ராய் கூட்டத்தினருக்கு பெரியாரை அறிமுகம் செய்துவைத்து, அவரால்தான் தான் ஒரு நாத்திகரானதாகக் குறிப்பிட்டார். பெரியாரின் தாக்கத்தால் நாத்திகரானது பற்றி விவரித்தார்.

கட்சிக்கொடி

1945 ஆம் ஆண்டு கருஞ்சட்டைத் தோழர் தொண்டர் படை என்ற அமைப்பை ஏற்படுத்தினார் பெரியார். திராவிடர் கழகக் கொடி அவரால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு உருவான கருப்புக் கொடியின் மத்தியில் ஒரு சிகப்பு வட்டம் இருந்தது. 3:2 என்ற விகிதத்தில் அவை இருந்தன. திராவிடர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வந்த துயரங்களை கட்சிக் கொடியின் நிறங்கள் மறைமுகமாக உணர்த்தின.கருமை இழிவு நிலையின் அடையாளமாகவும், சிகப்பு வட்டம் கழகத்தின் கொள்கைகளை பிரதிபலிக்கும் விதமாகவும் இருந்தன. 1946ஆம் ஆண்டு மே மாதம் மதுரையில் கருஞ்சட்டைப் படை மாநாடு நடைபெற்றது மாநாட்டின் இரண்டாம் நாள் பார்ப்பனிய இந்து சனாதன சதியால் மாநாட்டுப் பந்தல் தீக்கிரையானது. அதே ஆண்டில் டிசம்பர் 9ஆம் நாளன்று அரசியலமைப்புச் சபை அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்ட விதம் திருப்தி அளிக்காததால் பெரியார் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.

துக்க நாள்

ஆகஸ்ட் 15, 1947 -சுதந்திரம் கிடைத்த தினத்தை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றார் பெரியார். பிரிட்டிஷ் அரசிடமிருந்து பார்ப்பனக் கூட்டத்திற்கு அதிகார மாற்றம் நிகழ்வதில் என்ன இருக்கிறது என்று கேட்டார் அவர். பார்ப்பனர்களும் பனியாக்கள் எனும் வியாபாரிகள் கூட்டமும் இணைந்து நாட்டு மக்களை அடக்கி ஆளும் அவலம்தான் நிகழப்போகிறது என்று நம்பினார் அவர். சமுதாயம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல்கள், பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று தோன்றும் அளவுக்கு அதிகமாக இருக்கப்போகிறது என்று கவலைப்பட்டார் பெரியார். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் பெரியார் மகிழ்ச்சியடையவில்லை. மக்களின் துயரங்கள் நீங்கப் போவதில்லை என்றே அவருடைய தொலைநோக்குப் பார்வைக்கு தெரிந்தது.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்