Language

திராவிடர் கழகம்

ஒரு புரட்சியின் மலர்ச்சி

இட ஒதுக்கீடும் - பார்ப்பனர் எதிர்ப்பும்

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் குடியரசு மலர்ந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை எதிர்த்து, பார்ப்பனர்கள் மதராஸ் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடை கோரி முறையிட்டனர். எல்லோரும் சமமானவர்கள் என்று அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சட்டவிரோதமான செயல் என்பது பார்ப்பனர்களின் புலம்பலாக இருந்தது. இட ஒதுக்கீட்டை நிறுத்தும்படி நீதிமன்றங்களை வலியுறுத்தி வந்தார்கள் அவர்கள்.

சமூக நீதியை நிலைநாட்ட வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றங்கள் உத்தரவிட்ட அவலம் நிகழ்ந்தது. இடஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதியரசர்கள் பார்ப்பனர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கி அநீதி இழைத்தனர். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பெரியார் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினார். நாளடைவில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அவற்றின் விளைவாக 1951 ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக திருத்தப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15இல் பகுதி 40இல் முதல் திருத்தம் பின்வருமாறு செய்யப்பட்டது.

சமூக பொருளாதார நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள சமூகத்தினருக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் விசேஷ சலுகைகளை மாநில அரசு வழங்கிட தடை ஏதுமில்லை. ஒடுக்கப்பட்ட நலிவுற்ற மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவது சட்டம் அனுமதிக்கிறது என்று பொருள்படும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. பெரியாரின் முயற்சிகளால் விளைந்த இன்னொரு வெற்றி இது.

கடவுள் மறுப்புக் கொள்கை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்டது. பகுத்தறிவு செறிந்த எண்ணங்களைப் பின்பற்றி ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டியது அவசியம் என்கிற உண்மையைத் தெளிவுபடுத்த பெரியாரின் ஆணைப்படி 1953ஆம் ஆண்டில் புத்தர் தினம் கொண்டாடப்பட்டது. படித்தவர்கள், பாமரர்கள் அனைவரும் கண் மூடித்தனமான கடவுள் வழிபாடுகளில் ஈடுபடுவதை பெரியார் எதிர்த்தார். மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள் வெறும் பிரமை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பல இடங்களில் அவரவர் சொந்தக் காசில் வாங்கிய பிள்ளையார் சிலைகளை உடைக்க வைத்து போராடினார் பெரியார். மூட நம்பிக்கைகளுக்கு வழி வகுக்கும் புராணக் கதைகளுக்கும், கற்பனைக் காவியங்களுக்கும் ஆணிவேராக கடவுள் என்று ஒன்று இருந்ததாலேயே கடவுளை எதிர்த்தார் பெரியார். அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையை இன்றும் பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை

குலக்கல்வி எதிர்ப்பு

1952-54 காலகட்டத்தில் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி)இருந்தபோது குலக் கல்வி என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பள்ளி மாணவர்கள் சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பறையில் இருக்க வேண்டும் என்றும், பிற்பகலில் தங்கள் குலக்கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், கட்டுப்படுத்திய மோசமான திட்டம் அது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும், ஒதுக்கப்பட்டவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் சூழ்ச்சி தான் இந்தக் குருகுல கல்வித் திட்டம் என்பது திராவிடர் கழக தலைவருக்கு தெளிவாகப் புரிந்தது. அதை அடியோடு ஒழிக்க பெரியார் போராடத் துவங்கினார். ஆதரவும் பெருகியது. எதிர்ப்பு வலுத்த நிலையில் ராஜாஜி 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி விலக நேர்ந்தது. குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது. ஏப்ரல் 14ஆம் நாள் காமராசர் முதல்வராகப் பதவியேற்றார். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது திராவிடர் கழகத்தின் மகத்தான சாதனை.

பெரியாரும் - காமராஜரும்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பெரியார் போராடி வந்தார். முதல்வர் காமராஜர் அவருக்கு ஆதரவளித்தார். எல்லோருக்கும் கல்வி கற்பதில் சமவாய்ப்புக் கிடைக்கும் என்று காமராசர் உறுதியளித்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்புகள் கிடைக்க அவரும் பாடுபட்டார். பெரியாரும் காமராஜரின் கரங்களைப் பலப்படுத்தினார் தன் முழு ஆதரவால்.

1925ஆம் ஆண்டில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புவாரி உரிமைப் பிரச்சினையில் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்க - நிறைவேற்ற மறுத்ததன் காரணமாக காங்கிரசை விட்டு விலகி வெளியேறியவர் பெரியார். ஆனாலும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸ் தலைவர்கள் பலருடன் நட்பு பாராட்டினார். காமராஜருடனும் நல்லதொரு புரிதல் இருந்தது. கட்சிகளையும் கோட்பாடுகளையும் கடந்து தனி மனிதர்களாக அனைவரையும் நேசித்த பண்பாளர் பெரியார்.

அம்பேத்கருடன் கடைசி சந்திப்பு

1954 ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களிலும் 1955 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலும் பெரியாரும் அவர்தம் வாழ்விணையர் மணியம்மையாரும் கொள்கைப் பிரச்சார நிகழ்வுகளுக்காக பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் சென்று சுற்றுப் பயணம் செய்தனர்.

பர்மாவில் (இன்றைய மியான்மர்) பவுத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார் அம்பேத்கரை அங்கே சந்தித்து உரையாடினார். இருபெரும் தலைவர்களுக்குமிடையே நிகழ்ந்த கடைசி சந்திப்பு அதுதான் என்று கூறப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 நாள் அம்பேத்கர் மறைந்தார். ஒரு நல்ல நண்பரை பெரியார் இழந்தார்.

மயான பூமியில் இட ஒதுக்கீடு

பட்டுக்கோட்டை அழகிரிசாமி (அஞ்சா நெஞ்சன் அழகிரி என்று அழைக்கப்பட்டவர்) திராவிடர் கழகத்தின் கொள்கைகளில் உறுதியான பற்று கொண்டவர். அனல் பறக்க மேடைகளில் உரையாற்றி வந்தவர். 1949 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் அன்று மறைந்தார். 1955 ஆம் ஆண்டு அதே மார்ச் 28 அன்று பெரியார் தஞ்சையில் ஒரு மயான பூமிக்குச் சென்றார் - அழகிரி நினைவிடத்தில் மலர்வளையம் வைக்க. அப்போது பெரியார் சூத்திரர்களுக்கென்று தனியாக ஒரு இடம் அந்த மயானத்தில் ஒதுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு மனிதனின் மரணத்துக்கு பிறகும் ’வர்ண தர்மம்’ பின்பற்றுவதைக் கண்டித்தும், அறிவிப்புப் பலகைகளை அகற்றக் கோரியும் பெரியார் மாவட்ட ஆட்சியாளருக்கும் உடனே கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து அறிவிப்புப் பலகை அகற்றப் பட்டது. சூத்திரர்களுக்கு மயான பூமியில் தனி இடம் என்பது கைவிடப்பட்டது. பெரியார் அடைந்த கணக்கில்லா வெற்றிகளில் இதுவும் ஒன்று.

ராமர் பட எரிப்புக் கிளர்ச்சி

ராமாயணம் எனும் பிராண காவியத்தில் ராமனின் பாத்திரம் வர்ண தர்மத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதை கண்டிக்கும் விதமாக 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் நாள், ராமரின் உருவப் பொம்மைகளை எரிக்கும் போராட்டம் நடத்த பெரியார் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். திராவிடர் கழகத்தின் சார்பில் அதை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ராமர் பட எரிப்புக் கிளர்ச்சி தொடர்பாக பெரியார் தடுப்புக் காவல் சட்டப்படி கைது செய்யப்பட்டார்.

பிராமணாள் பெயர் அழிப்பு கிளர்ச்சி

அன்றைய மதராஸில் பிராமணாள் ஓட்டல் என்ற பெயர்ப் பலகையுடன் பல பார்ப்பனர்கள் உணவகம் நடத்தி வந்தனர். இதற்கு பெரியார் கடும் எதிர்ப்புப் தெரிவித்தார். வர்ண தர்மம் மறைமுகமாக பரப்பப்படுகிறது என்றார் அவர். 1957 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் மதராஸ் கஃபே என்னும் உணவகத்தின் முன் போராட்டம் துவங்கியது. பல மாதங்களுக்குப் பின் பிராமணாள் என்ற பெயர் அழிப்புப் போராட்டம் வெற்றி பெற்றது. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் திராவிட கழகம் அடைந்த இன்னொரு வெற்றி இது.

ஜாதிப் பாகுபாட்டை ஆதரிக்கும் விதமாக அமைந்த அரசமைப்புச் சட்ட பக்கங்களின் நகல் கழகத் தொண்டர்களால் எரிக்கப்பட்டது. இது மற்றொரு போராட்டம். 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் நடந்த இந்த போராட்டத்தில் ஏறத்தாழ 10,000 திராவிட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். 3000 போராளிகள் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை வாசத்திற்கு அஞ்சாத திராவிடர் கழகத் தோழர்கள் பெருமிதத்துடன் தண்டனையை ஏற்றுக் கொண்டனர்.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்