Language

திராவிடர் கழகம்

ஒரு புரட்சியின் மலர்ச்சி

போராட்டங்களும் - சிறைவாசமும்

பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விட்டு கழகத் தொண்டர்களை ஏவி விட்டதாக பெரியார் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதற்கேற்றபடி போலியான குறிப்புகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. எல்லாமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று பெரியார் அவற்றை மறுத்தார். வாய்மை வென்றது.

அரசமைப்புச் சட்டப் பக்கங்களின் நகல்களை கழகத்தோழர்களாக பாடுபட்டு வந்த ராமசாமியும் வெள்ளைச்சாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாதிப் பாகுபாட்டை ஆதரிக்கும் விதத்தில் சிலவரிகள் அந்தப் பக்கங்களில் இருந்ததால் அவற்றை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள் அவர்கள். இருவரும் சிறையில் உயிரிழந்தார்கள். சிறை அதிகாரிகளிடம் மன்றாடி வாதாடி அவர்களுடைய சடலங்களைப் பெற்ற மணியம்மையார், உரிய மரியாதைகளுடன் அவற்றை அடக்கம் செய்தார். உயிர்நீத்த அவ்விரு தோழர்களின் இறுதி ஊர்வலம் திருச்சியின் பிரதான வீதிகளில் சென்ற போது பல கழகத் தொண்டர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதனர். வேறு பல போராளிகளும் சிறைவாசம் அனுபவித்தனர். அங்கு அவர்கள் அனுபவித்த கொடுமைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, விடுதலையான பிறகு உயிரிழந்தார்கள் - ஏறத்தாழ 15 தொண்டர்கள்.

1959 ஜனவரி மாதம் பெங்களூரில் நடந்த அகில இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் கலந்து கொள்ள பெரியார் சென்றார். ஜெனரல் கரியப்பா, மேடப்பா இருவரும் உடன் இருந்தனர். ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்ற கருத்தை பெரியார் வலியுறுத்தினார். பிப்ரவரி மாதம் வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பெரியார். பகுத்தறிவு, சமூகநீதி மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளை பல வடநாட்டு நகரங்களில் பரவிடச் செய்து பிரச்சாரம் செய்தார் அவர்.

தேசப்படஎரிப்பு

1960ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் வரைபடத்தை எரித்து போராட்டம் நடத்தினார் பெரியார். தேசப்படத்தில் தமிழ்நாடு சித்தரிக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடந்தது. ஏறத்தாழ 4000 போராட்டக்காரர்கள் இந்த வரைபட எரிப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டனர்.

முழுநேரத் தொண்டர்

தன் வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு திராவிடர் கழகத்திற்கு முழுநேரத் தொண்டனாக வர இசைந்தார் தோழர் கி.வீரமணி. பெரியார் அவரைப் பாராட்டி 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் நாள் விடுதலை நாளிதழில் - வரவேற்கிறேன் என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டினார்.

பதவி விலகிய காமராஜர்

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபடும் நோக்கத்தில் முதல்வர் பதவியைத் துறக்க காமராஜர் முடிவு செய்தார். இது விபரீதமான முடிவு என்று குறிப்பிட்டு காமராஜருக்கு தந்தி அனுப்பிய பெரியார் அந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் காமராஜர் பிடிவாதமாக முதல்வர் பதவியை விட்டு விலகினார். 1963ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் எம்.பக்தவத்சலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்த போராட்டங்கள்

சி.பி.ராமசாமி அய்யரின் தலைமையில் இயங்கி வந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கழகம் நாடாளுமன்றத்தில் 1963ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை நிறைவேற்ற வைத்தது. தனி மாநில கோரிக்கைகளை இந்த மசோதா சட்ட விரோதமாக்கியது. பிரிவினைக்கான கோரிக்கைகளுக்கு இந்த மசோதா தடை விதித்தது. சுயாட்சி கோருவது குற்றம் என அறிவிக்கப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டதை பெரியார் எதிர்த்தார்.

1964ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் உச்சநீதிமன்றக் கண்டன நாள் கடைப்பிடிக்க பெரியார் அறிவுறுத்தினார்.

எதிர்கொண்ட பிரச்சினைகள்

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. பல போராளிகள் உயிரிழக்க நேர்ந்தது. தலைவர்கள் பொறுப்பேற்று ஒருங்கிணைந்து வழிநடத்தத் தவறியதால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றை பெரியார் கடுமையாக கண்டித்தார். மேற்பார்வையோ கட்டுப்பாடுகளோ இல்லாத போராட்டங்கள் வெற்றி பெறாது என்று நம்பினார் அவர்.

பசுவதைத் தடுப்புக் குழுவினர் என்ற பெயரில் கிளம்பிய ஒரு கூட்டம், இந்துமத வெறியர்கள் சிலருடைய தூண்டுதலால் காமராஜரின் தில்லி நகர வீட்டை கொளுத்த முயன்றனர். அவரைக் கொல்லவும் திட்டம் தீட்டினர். 1966ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் அவரைக் கொல்ல முயற்சி நடந்தது. விபரீதம் நிகழும் முன் காமராஜர் உயிர்தப்பி வெளியேறினார். பெரியார் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலை வன்மையாக கண்டித்தார். காமராஜருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1957, 1962, 1967 ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. தி.மு.க.வை எதிர்த்தது. ஆனால், 1967இல் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தலில் வெற்றிபெற்ற அறிஞர் அண்ணா தன் அமைச்சர்களோடு திருச்சிக்குச் சென்று அப்போது அங்கு தங்கியிருந்த தன் வழிகாட்டியாக விளங்கிய பெரியாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நிறைவேறிய ஆசைகள்

மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் அங்கீகரிக்கப்பட பாடுபட்ட தி.மு.க.வை பெரியார் மனதாரப் பாராட்டினார். சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க தி.மு.க. ஆட்சி போராடியதும், பெரியாருக்கு மகிழ்ச்சியளித்தது; சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் பார்ப்பனரின் மந்திரங்கள் தவிர்க்கப்பட்டு நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று 1920ஆம் ஆண்டி லேயே வலியுறுத்தியவர் பெரியார். தி.மு.க. ஆட்சியில் அவருடைய நீண்ட கால ஆசை நிறைவேறியது. இன்று சுயமரியாதைத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடந்து வருவதற்கு பெரியாரும், திராவிடர் கழகமும் தான் காரணம்.

அண்ணாவின் மறைவு

1967 அக்டோபர் மாதம் பெரியார் வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 12, 13, தினங்களில் லக்னவ் நகரத்தில் நடந்த பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தோர் மற்றும் சிறுபான்மையினர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார் பெரியார்.

பெரியாரின் பிரதான சீடராக விளங்கியவர் அறிஞர் அண்ணா. லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டிய தலைவர். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்த போது அவருடைய வயது 60 தான். அண்ணாவின் மறைவு பெரியாரைத் துயரத்தில் ஆழ்த்தியது. பெரிதும் வருந்தி இரங்கலுரை பகன்றார் அவர்.

பார்ப்பனர் ஆதிக்கம்

கோவில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஓர் எழுதாத சட்டம் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இதை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். அர்ச்சகர்களாகப் பணிபுரியும் உரிமை அனைத்து ஜாதியினருக்கும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் அவர். வர்ண - ஜாதிக் கொடுமை ஒழிய அதுவே வழி வகுக்கும் என்று நம்பினார் அவர். ஜாதிப் பாகுபாடு எனும் இழிவே கோவில் கர்ப்பகிரகங்களில் தான் பிறக்கிறது என்றார் அவர். எல்லோருக்கும் அர்ச்சகர்களாகும் உரிமை கிடைக்க திராவிடர் கழகம் தீவிரமாகப் போராடியது.

யுனெஸ்கோ விருது

பெரியாரின் கொள்கைகளையும் சேவை களையும் பாராட்டி உலக நாடுகள் அவையைச் சேர்ந்த கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்தின் தமிழ்நாடு கிளையான யுனெஸ்கோ மன்றம் 1970ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பெரியாருக்கு விருது வழங்கி கவுரவித்தது.

”பெரியார் - புது உலகின் தொலை நோக்காளர்! தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்! சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை! அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று அந்த விருதின் மீது பொறிக்கப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த திரிகுணசென், 1970ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாளன்று யுனெஸ்கோ விருதை பெரியாருக்கு நேரில் வழங்கி சிறப்பித்தார்.

புதிய பத்திரிகைகள்

1970ஆம் ஆண்டு ’உண்மை’ மாத இதழைத் (தற்போது மாதமிருமுறை) துவக்கினார். 1971ஆம் ஆண்டு ’மாடன் ரேஷனலிஸ்ட்’ ஆங்கில மாத இதழைத் துவக்கினார். தன் பகுத்தறிவுக் கொள்கைகளையும் மனித நேயம் சார்ந்த சிந்தனைகளையும் பரப்புவதே அவற்றின் நோக்கம் என்றார்.

நீங்கிய தடைகள்

ராமாயணத்தின் இந்திப் பதிப்பை பெரியார் வெளியிட்ட போது அலகாபாத் உயர்நீதிமன்றம் அதற்கு தடைவிதித்திருந்தது. 1971ஆம் ஆண்டு தடை நீங்கியது. மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசால் பெரியாரின் ராவண காவியம் நூல் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடையும் பின்னர் நீங்கியது. இவையும் திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றிகள் தாம்.

சேலம் ஊர்வலம்

1971ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் - கோவில்களில் அனைவருக்கும் அர்ச்சகர்களாகப் பணிபுரியும் உரிமை உண்டு என்று தி.மு.க. ஆட்சி சட்டம் நிறைவேற்றியது.

ஜனவரி 23ஆம் நாள் - மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சேலத்தில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடந்தது. சில விஷமிகள் ஊர்வலம் நடைபெற்றபோது காலணிகளை எறிந்தனர். அவற்றை கையில் எடுத்து போராட்டக்காரர்கள் ராமரின் உருவச்சிலை மீது வீசினர். சம்புகன் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்புச் சிறுவனை ராமன் கொன்றதை பெரியாரின் தொண்டர்கள் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் ஊடகங்கள் பெரியாரின் எதிர்ப்பு குறித்து மிகைப்படுத்தியும் திரித்தும் பிரச்சாரம் செய்தன. 1971 மார்ச் மாதம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியோடு நடந்த பொதுத் தேர்தலின் போது அவர்களுக்கு எதிராக இந்த நிகழ்வு அரசியல் எதிரிகளால் பயன்படுத்தப்பட்டது. எல்லா எதிர்ப்புகளையும் மீறி தமிழ்நாட்டில் தி.மு.க.வும், மக்களவையில் காங்கிரசும் பெரும்பான்மை வாக்குகள் பெற்றன. பெரியாரின் கருவறை நுழையும் போராட்டம் மறக்க இயலாத ஒன்று. பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவை ஒழிப்பதேதன் பணி என்று பெரியார் முழங்கி வந்தார். மனித நேயம், பகுத்தறிவு சுயமரியாதை, பெண்களின் முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு - இவையாவும் திராவிடர் கழகத்தால் தான் மக்களை அடைந்தன.

மேற்கண்ட சமுதாயப் பிரச்சினைப் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தால் தான் ஏற்பட்டது. பெரியாரின் நீண்ட கால ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வந்துள்ளன.

கடவுள் மறுப்பு வாசகங்கள்

பெரியாரின் சிலைக்கு கீழே பொறிக்கப்பட்ட கடவுள் மறுப்பு வாசகங்களுக்கு எதிராகவும் விஷமிகள் புலம்பத் தொடங்கினார். வழக்கும் தொடரப்பட்டது - அவற்றை அகற்றக்கோரி. அந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. 1967ஆம் ஆண்டு பெரியாரே அறிவித்த கடவுள் மறுப்பு வாசகங்கள் அவை என்பது தெளிவாயிற்று.

இறுதி உரை

பெரியார் கலந்து கொண்டு உரையாற்றிய இறுதிக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாளன்று நடந்தது. சமுதாயத்தில் சமத்துவம் தழைக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் மனிதனின் வாழ்வில் எந்த ஓர் இழிவும் இருக்கக் கூடாதென்றும் தன் இறுதி உரையில் முழங்கினார் அவர். மறுநாள் அவருடைய உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று அவர் மறைந்தார். பெரியாரின் வாழ்க்கை உலக வரலாற்றின் சிறந்த பகுதியாகும். புதியதோர் யுகத்தை துவக்கி வைத்து விட்டு மறைந்தவர் அவர்.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்