Language

திராவிடர் கழகம்

ஒரு புரட்சியின் மலர்ச்சி

தடை வளர்த்த படை

காந்தியோடு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஓர் இந்து மதவெறியனால் 1948 ஜனவரி 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டபோது பெரியார் அதிர்ச்சி அடைந்து மனம் வருந்தினார். அவரின் நினைவைப் போற்றும் விதமாக இந்தியாவை காந்தி நாடு என்று பெயர் மாற்றம் செய்யலாம் என்று கூறினார்.

1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் - மதராஸ் மாகாண காங்கிரஸ் அரசு கருஞ்சட்டைப் படையின் தன்னார்வலர் குழுவிற்கு தடை விதித்தது. அதன் மூலம் திராவிட கழகம் மேலும் பிரபலமடைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் விளைவாக 1948 ஆம் ஆண்டு மே 8, 9 நாள்களில் தூத்துக்குடியில் நடந்த திராவிட கழக மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் திரண்டு வந்தனர். பெரும்பாலானவர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக கருஞ்சட்டை அணிந்து கலந்து கொண்டார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாகவே அது அமைந்துவிட்டது.

இந்தி எதிர்ப்பு

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகளில் மறுபடியும் இந்தி மொழி திணிக்கப்பட்டதும் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் துவக்கினார். போராட்டத்தைத் தடுக்க அரசு அதிகாரிகள் இயன்ற வரை முயன்றனர். ஆனால் நாளடைவில் மக்களின் எதிர்ப்புக்குத் தலை வணங்கி கட்டாய இந்தி திணிப்புத் திட்டத்தை வேறு வழியின்றி கை விட்டனர். பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது.

ஜாதி பாகுபாட்டு இழிவுகள்

வர்ண பேத அடிப்படையில் ஜாதிப் பாகுபாடுகள் ஏற்பட்டு மக்கள் அவதியுறுவதைக் கண்ட பெரியார் வெகுண்டெழுந்தார். அய்ந்து அடுக்குகளாக மக்கள் பிரிக்கப்பட்டு விவரிக்க இயலாத துயரங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அனுபவித்து வந்தனர். தீண்டாமைக் கொடுமையும் நாட்டில் தலை விரித்தாடியது. இந்துமத வெறியர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவுநிலைக்குத் தள்ளப்பட்டனர். இவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகம். ஜாதி ஒழிப்புப் போரில் தலைமை வகித்தவர் தந்தை பெரியார். ஜாதிப் பாகுபாட்டால் பயனடைந்தவர் பார்ப்பனர்கள் மட்டுமே.

முறைகேடான வழிகளில் வளம் பெற்று, விஷமத்தனமான செய்கைகளாலும் தந்திரங்களாலும் முன்னேற்றமடைந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நாட்டையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தது. சமூக நீதிக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் நயவஞ்சகக் கூட்டத்தினேராடு போராட நேர்ந்தது. தன் ஆழ்ந்த சிந்தனைகளாலும் நீண்ட கால அனுபவங்கள் ஏற்படுத்திய முதிர்ச்சியாலும் பெரியார் அனைவருக்கும் ஆறுதல் கூறினார். எவருடனும் சமரசம் செய்து கொள்ளாமல், பின்வாங்காமல், முழு மூச்சுடன் தளர்ச்சியுறாமல் அனைவரும் தொடர்ந்து போராடினால் துயர் நீங்கி விடியல் பிறக்கும் என்று வலியுறுத்தி வந்தார் பெரியார்.

நிறம் மாறிய அன்பர்கள்

சுரண்டல் சமுதாய அமைப்பை முழுதாக மாற்றி சமூக நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார் அவர். அதிகாரத்தைக் கைப்பற்றி உயர் பதவிகளை அளிக்கும் நோக்கத்துடன் தேர்தல்களில் போட்டியிட எவரும் ஆசைப்படக் கூடாது என்று வலியுறுத்தி வந்தார் அவர். தேர்தல் வெற்றியால் உயர்ந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்றார். பொதுநல எண்ணம் மறைந்து சுயநலமே இலக்காகி விடும் என்றும் எச்சரித்தார். ஆனால், பெரியாரின் தொண்டர்கள் சிலர் பதவி ஆசை கொண்டவர்களாக மாறினர். அரசியல் களத்தில் இறங்கி ஆட்சியில் பங்கு பெறும் சபலம் அவர்களை திசை திருப்பியது. தக்க சமயத்தில், சாதகமான தருணத்தில் பெரியாரை விட்டு விலகி விடவும் துணிந்து விட்டனர் சிலர்.

பாதை மாறிய நண்பர்கள்

1949 ஜூலை 9ஆம் நாளன்று பெரியார் மணியம்மையை மணந்து ஏற்றுக் கொண்டபோது அது தான் சரியான தருணம் என்று அவர்களுக்குத் தோன்றியது. எழுபது வயது மனிதர் முப்பது வயது பெண்மணியை எப்படி மணந்து கொள்ளலாம் என்று சொல்ல ஆரம்பித்தனர். அவரைப் புரிந்து கொள்ளாத சிலர் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினர். அறிஞர் அண்ணா அவர்களும் பிரிந்து சென்றதுதான் கழகத் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், பெரியார் எவருடைய எதிர்ப்புக்கும் அஞ்சவில்லை.

பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர். அறிஞர் அண்ணாவின் தலைமையில் புதிய கட்சி - தி.மு.க. துவங்கியது.

இலக்கை நோக்கிப் பயணம்

எவருடைய எதிர்ப்பும் விமர்சனமும் பெரியாரை சிறிதும் பாதிக்கவில்லை. தன் பணியை முழு மூச்சுடன் தொடர்ந்தார் அவர். சமத்துவமும் சகோதரத்துவமும் தழைக்கும் மனித சமுதாயத்தை உருவாக்குவது மட்டுமே அவருடைய லட்சியமாக இருந்தது. எதிரிகளையும் நண்பர்களாகவே கருதும் கண்ணியமும் அவரிடம் இருந்தது. பிரிந்து சென்றவர்களையும் பகைமையுணர்வோடு ஒருநாளும் பார்த்ததில்லை அவர்.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்